Friday, May 29, 2009

விளம்பர இடைவேளைக்கு நடுவே

பித்துப் பிடித்த மனநிலையின்
உச்சத்தில் பிறந்த
கவிதைகளின் தொகுப்பு என
கவிஞன் சொல்லி இருந்தான்
தன் முன்னுரையில்.
இடம், தேதி குறிப்பிட்டு
முடித்திருந்த
அந்த முன்னுரைக்குக் கீழே
கவிதைகள் வெளியான
இதழ்களின் பெயர்களும்,
புத்தகத் தயாரிப்பில்
உறுதுணையாக இருந்த
நண்பர்களின் பெயர்களும்
பட்டியலிடப்பட்டு இருந்தன.
ஒழுங்கு கலைந்த மனத்தின்
பேச்சாக விரிந்த
கவிதைகளுக்கு நடுவே
புத்தகத்தின் பெயரும்,
பக்க எண்ணும்,
கவிஞன் பெயரும்
ஓயாமல் வந்து கொண்டிருந்தன
விளம்பர இடைவேளைகளைப் போல.

(C) veenaapponavan@yahoo.com

Sunday, May 24, 2009

கைப்பிடி கனவு

மடித்து வைத்துத் தூங்கிய
கைகளின் அழுத்தம்
தோளில் குழந்தையைச் சுமந்த
கனவாக வெளிப்பட,
புரண்டு படுத்தவள்
அறைத்தோழியை
கொஞ்சிச் சிரிக்கிறாள்.

(c) veenaapponavan@yahoo.com

Thursday, May 21, 2009

மாரியம்மன் வேப்பமரம்

மாரியம்மன் கோயில் வேப்பமரம்
எங்கள் வீட்டுப் பக்கமாக
சாய்ந்து வளர்ந்திருக்கிறது.
இலை, பூ பறிக்க வேண்டுவோர்
வீட்டு கேட்டை அசைத்து
குரல் கொடுத்துவிட்டு
மாடிப்படி ஏறுகிறார்கள்.
குழந்தைகளுக்கு
அவர்கள் கை காட்டிய பூக்களைப்
பறித்துக் கொடுத்தேன் நேற்று.
அதை மாரியம்மனிடம் காட்டி
அவள் அருளை
அதில் ஏற்றிக் கொண்டு போனார்கள்.
களை ஏறி
ஒளி வீசிக் கொண்டிருந்தாள் மாரி.

(c) veenaapponavan@yahoo.com

Monday, May 11, 2009

தேடப்படும் தீவிரவாதி

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தின்
மெட்டல் டிடெக்டர் வாயிலுக்குள்
வலது கால் வைத்து உள்ளே நுழைந்தேன்.
நூற்றுக்கணக்கானவர்கள்
கடந்து கொண்டிருந்த இடத்தில்
என்னை மட்டும் சோதனைக்கு அழைத்தாள்
போலீஸ்காரி.
பையையும், பயணச்சீட்டையும்,
அடையாள அட்டையையும் சோதித்து
விவரங்களைப் பதிவு செய்து கொண்டு
விடுவித்தாள் என்னை.
அடுத்த வாரம் அதே மாதிரி
ரயில் நிலையத்துக்குள் நுழைந்த போது
நானாகவே என் பையை
அவளிடம் நீட்டினேன்.
என்னை அடையாளம் கண்டு கொண்டவள்
புன்னகைத்து 'போ' என்று
கை காட்டி விட்டாள்.
தேடப்படும் தீவிரவாதிகளின்
பட்டியலில் இருந்து
என் பெயர் நீக்கப்பட்ட சந்தோஷத்தில்
மூன்றாவது நடைமேடையை நோக்கி
உற்சாகமாக நடந்தேன்.

(c) veenaapponavan@yahoo.com

Friday, May 01, 2009

என்னிடம் பெரிதாக

'வாழ்க்கை எப்படிப் போகிறது'
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்.
முன் தினம்
சரவணபவனில்
பெரிய தோசை வேண்டும்
என்று அடம் பிடித்து வாங்கி
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப் பற்றி சொன்னேன்.
'அப்புறம் பார்க்கலாம்' என்று
மறைந்து போனான்.
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.

(c) veenaapponavan@yahoo.com

Thursday, April 23, 2009

K அலைவரிசை

K அலைவரிசை
சரியாகத் தெரியவில்லை
என் தொலைக்காட்சியில்.
படமும் ஒலியும்
இடைவிடாமல்
குதித்துக் கொண்டிருந்தன.
அதனால்
அதைத் தவிர்த்து விட்டு
பிற அலைவரிசைகளில் மட்டும்
உலவிக் கொண்டிருந்தேன்.
குப்பைகள் நிறைந்து
தூசி படிந்து
மின்விளக்கு பழுதாகி
நான் புழங்காமல்
இருக்கும் அறைக்குள்
குதித்தபடியே
சென்று மறைந்தது
K அலைவரிசை

(c) veenaapponavan@yahoo.com

Wednesday, April 22, 2009

அம்மாச்சி

படுத்த படுக்கையான அம்மாச்சி
ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.
தன் கல்யாணம் எப்படி நடந்தது என்பதைத்
திரும்பத் திரும்ப
மூன்று நாட்களுக்கு சொன்னவள்
நான்காம் நாள்
தன் பேத்தியை அழைத்து
பக்கத்தில் உட்கார வைத்து
பின் கழுத்தில் குங்குமம்
வைத்துக் கொள்வதைப் பற்றி
எடுத்து உரைத்தாள்.
கவிதை எழுதும் பழக்கமுள்ள பேத்தி
இப்போதும் சிலசமயம்
சிமிழில் இருந்து
விரலால் தொட்டு
குங்குமத்தை எடுத்து
மெதுவாக
கையை பின்னால் கொண்டு போகிறாள்.
பின்னால் போனதும்
அது அவள்
அம்மாச்சியின் கையாகி விடுகிறது.

(c) veenaapponavan@yahoo.com