Saturday, October 21, 2006

5 ரூபாய் வசந்தம்

மெல்லிய பச்சை நிறத்தில்
புத்தம் புதிய 5 ரூபாய் நோட்டு ஒன்று
துளிர்த்திருந்தது என் பர்ஸில்.
சரசரவெனெ எல்லா கிளைகளிலும்
தோன்றி விட்டன தளிர்கள்.
முன்னொரு பருவத்தில்,
அழுக்கான கிழிந்த 5 ரூபாய் நோட்டுக்கள்
சருகுகளாய் உதிர்ந்து நிரம்பிய கடைகளுக்குள்
வசந்தம் வந்து விட்டது இப்போது.

(c) veenaapponavan@yahoo.com

என் பங்கு சூரியன்

என் பங்கு சூரியனை
நான் பல வழிகளில்
செலவழித்து விட்டேன்.
மாரியம்மன் கோயில் வாசல்
பெட்டிக்கடையில் வாங்கிய
ஃபிலிமை ஊடுருவி
தரையில் படம் காட்டியதில் கொஞ்சம்.
கலைடாஸ்கோப் வைத்து
விளையாடியதில் கொஞ்சம்.
லென்ஸினால் கதிர்களைக் குவித்து
சருகுகளைப் பற்ற வைத்ததோடு
என் பங்கு தீர்ந்து விட்டது.
இப்போது என் நிழல் கீழே விழுவதில்லை.

(c) veenaapponavan@yahoo.com

Monday, October 09, 2006

குட்டி

குட்டி தலையணை, குட்டி போர்வை,
குட்டி டம்ளர் மற்றும்
குட்டி கொட்டாவியுடன்
குழந்தைகள் உருவாக்குகிறார்கள்
ஒரு குட்டி உலகத்தை.
அதில் பெற்றோர்களின் பெரிய விரல்களுக்கு
குட்டி கவளங்களை செய்யும்
பயிற்சியைத் தருகிறார்கள்.

(c) veenaapponavan@yahoo.com

Wednesday, October 04, 2006

கிழமை மயக்கம்

சனிக்கிழமை ஒளிபரப்பாகி வந்த
தொலைக்காட்சித் தொடரை
வெள்ளிக்கிழமைக்கு மாற்றி விட்டார்கள்.
இதனால் சனிக்கிழமை போல்
தோற்றம் கொண்டது வெள்ளிக்கிழமை.
பெரிய அக்காவின் உடையை
அணிந்து கொண்டு விளையாடும்
குட்டித் தங்கையை
வேடிக்கை பார்ப்பது போல
வெள்ளிக்கிழமையை வேடிக்கை பார்த்தேன்.

(c) veenaapponavan@yahoo.com