Tuesday, July 24, 2007

மரமுதிர் காலம்

அதிகாலை நடை பழகும் போது
இரவு பெய்த மழையில்
விழுந்து கிடந்த
பெருமரத்தைப் பார்த்தேன்.
வழியில் உள்ள மரங்களை எல்லாம்
உற்றுப் பார்த்துக் கொண்டே
வீடு வந்து சேர்ந்தேன்.
கொஞ்சமும் நம்பிக்கை ஏற்படவில்லை.

(c) veenaapponavan@yahoo.com

Sunday, July 22, 2007

மாயாண்டி

நம்பியாரின் காட்டு பங்களாவில்
நாயகியையும் குழந்தைகளையும்
கட்டிப் போட்டு விட்டு
வயதான பெரியவரை மிரட்டி
பொய்யாய் தயாரித்த உயிலில்
கையெழுத்து வாங்கி
அங்கேயே அவரை சுட்டுத் தள்ளிய
காட்சியைப் பார்த்தேன்.
அந்த உயில் பத்திரத்தில்
என்ன எழுதி இருந்தது என்று
தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு
என் பயணத்தைத் தொடங்கினேன்.
படிப்படியாக விசாரித்து
விறகுக்கடை வைத்திருக்கும்
பழைய துணை நடிகரை அடைந்தேன்.
படம் பெயர் சொல்லி
காட்சியை விளக்கியதுமே சொல்லி விட்டார்,
அது வெறும் வெற்றுக் காகிதம் என்று.
ஏமாற்றத்துடன் அவரிடம் இருந்து விடை பெற்றேன்.
"ஒரு நிமிஷம் தம்பி" என்று அழைத்து
அந்தக் காட்சியில் எல்லாரையும் கட்டிப் போட்ட
நம்பியாரின் அடியாள் மாயாண்டி
தான் தான் என்று சொன்னார்.
அதில் அவர் பயன்படுத்திய கத்தியைப் பற்றி
உற்சாகமாக பேச ஆரம்பித்தோம்.

(c) veenaapponavan@yahoo.com

Sunday, July 08, 2007

'ன்'னில் முடியும் பெயர்

அழுக்காய்ப் போன படுக்கை விரிப்பை
திருப்பிப் போட்டுக் கொண்டேன்.
படுக்கை விரிப்புக்கு
இரண்டு பக்கம் இருப்பது
எவ்வளவு வசதியாக இருக்கிறது.
இரண்டு பக்கம் கொண்ட விரிப்பை
கண்டுபிடித்தவன் பெயரைத் தேடினேன்.
ரேடியோ, கலர் டிவி, விமானம் போன்றவைகளைக்
கண்டுபிடித்தவர்களின் பெயர்கள் அடங்கிய
புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்து வந்தேன்.
'படுக்கை விரிப்பு' பகுதியில் பார்த்தேன்.
குறிப்பிட்ட விதத்தில் விரிப்பை மடித்தால்
அதிலேயே கண்டுபிடித்தவர் பெயர் தெரியும்
என்று போட்டிருந்தது.
படுக்கை விரிப்பை நுணுக்கமாக மடித்து
ஒரு படம் வரையப்பட்டு இருந்தது.
எப்படி மடிப்பது என்று 151 படிகள் கொண்ட
செய்முறை விளக்கமும் இருந்தது.
பல மணி நேரம் முயற்சி செய்து
அதே மாதிரி மடித்தேன் என் விரிப்பை.
மிகவும் கவனமாக
அதை கையில் பிடித்துக் கொண்டு
பெயரைப் படிக்க ஆரம்பித்தேன்.
கடைசி எழுத்து 'ன்' தெரிந்தது.
உற்சாகத்தில் கை தவறி
மடிப்பு கலைந்து விட்டது.
மறுபடி அதே மாதிரி
மடிக்கவே முடியவில்லை.

(c) veenaapponavan@yahoo.com

Sunday, July 01, 2007

இன்றே கடைசி

இன்று நள்ளிரவு முதல்
மாநிலத்தில் சாராய விற்பனை
தடை செய்யப்படுகிறது.
உலகத்தின் கடைசி நாள்
10 ரூபாய்க்கு 3 பாக்கெட்டுகள்
சாராயத்துடன் ஆரம்பித்தது.
கொஞ்ச நேரத்திலேயே
ஒரு பாக்கெட் இரண்டு ரூபாயாகக் குறைந்தது.
அப்புறம் ஒரு ரூபாய் ஆனது.
குடிக்காதவர்களெல்லாம்
குடிக்க ஆரம்பித்தார்கள்.
நண்பகல் ஆகியும்
சூரியன் வெளியே வராமல்
பதுங்கிக் கிடந்தது.
காசு கொடுத்தல், சில்லறை வாங்குதல்
என்ற செயல்கள்
அர்த்தமிழந்து போன சாயங்காலத்தில்,
சாராயம் மழையாகவே பொழிந்து
உலக அழிவு ஆரம்பித்த போது
நாளின் முதல் சாராய சாவு பதிவானது.

(c) veenaapponavan@yahoo.com