Monday, September 24, 2007

மிச்சமிருந்த கனவு

விடிகாலையில் எழுந்து
விளக்கைப் போட்டதும்
கரப்பான்பூச்சி போல
ஓடி மறைந்தது
மிச்சமிருந்த கனவு.

(c) veenaapponavan@yahoo.com

Sunday, September 16, 2007

நான்தான் மின்விளக்கு

"நான்தான் மின் விளக்கு" என்று
அறிவித்தாள் சிறுமி
மாறுவேடச் சுற்றில்.
தொப்பி அணிந்து அதன் மேல்
ஒரு பல்பு பொருத்தி இருந்தாள்.
மேலும் அவள் சொன்னாள்:
என்னை 1869-ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி
தாமஸ் ஆல்வா எடிசன்
கண்டு பிடித்தார்.
அன்று முதல் நான் இந்த
உலகத்துக்கு ஒளி அளித்து வருகிறேன்.
என்னை ஈரக் கையால் தொடக் கூடாது
என்ற எச்சரிக்கையுடன் முடித்தாள்.
"அது சரி. இந்த பல்பு இப்போது
எரிகிறதா இல்லையா?" என்றாள்
நிகழ்சி நடதியவள்.
பதில் எதும் சொல்லாமல்
சிரித்தாள் மின்விளக்கு பிரகாசமாக.

(c) veenaapponavan@yahoo.com

Monday, September 03, 2007

ரயில் பெண்

பெட்டிகள் இன்றி தனியாகப் போன எஞ்சினைப்
பார்த்து 'குட்டி ட்ரெயின்' என்று கூவுகிறாய்.
ஸ்டேஷன் குழாயில் தண்ணீர் பிடித்து
நடை மேடை மேல் மெதுவாக நடந்து போய்
பூச் செடிகளுக்கு ஊற்றுவதைப் போல்
தண்டவாளத்துக்கு தண்ணீர் ஊற்றுகிறாய்.
அதை அப்படியே வீடு வரை வளர்த்து விட்டு
குட்டி ட்ரெயினைப் பிடித்து வீட்டுக்குக்
கிளம்பி விடுவாயோ பெண்ணே?

(c) veenaapponavan@yahoo.com