எல்லா ஜன்னல்களுக்கும் திரை போட்டு மூடி
வீட்டை இருட்டாக்கி விட வேண்டும்
என்று தோன்றிய
ஒரு விடுமுறை நாளின் நண்பகல் பொழுதில்
அவளை சந்தித்தேன்.
அலை அலையாக அடுக்கி வைத்திருந்த
திரை சுருள்களின் நடுவில் இருந்து வெளி வந்தாள்.
அளவையும் நிறத்தையும் கேட்டு
அதன்படி கத்தரித்துக் கொடுத்தாள்.
வாங்கின பணத்துக்கு ரசீது எழுதிக் கொடுத்தாள்.
கடையை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தபோது
ஞாபகம் வந்தது போல் கைதட்டி அழைத்தாள்.
என் ரசீதைக் கேட்டு வாங்கி மேஜை மேல் விரித்தாள்.
பேனாவை எடுத்துக் கொடுத்து
அதில் என் பெயர், முகவரி, தொலைபேசி எண்ணை
எழுத சொன்னாள்.
நானே எழுதி நானே எடுத்துக் கொண்டு போக வேண்டிய
அவசியம் என்ன என்று வாதிட்டுப் பார்த்தேன்.
அவள் கேட்கவில்லை.
"முதலாளி திட்டுவார். நீங்கள் எழுதுங்கள்"
என்று வற்புறுத்தி எழுத வைத்தாள்.
அப்புறம் நிம்மதியாக திரைகளுக்கு நடுவே போய்
உட்கார்ந்து கொண்டாள்.
நான் ஜன்னல்களை திரை கொண்டு மூடி விட்டு
விட்டுப் போன பின்கோடு எண்ணை
ரசீதில் நிரப்பி அதை மடித்து பத்திரப்படுத்தி விட்டு
டிவி போட்டுப் படுத்துக் கொண்டேன்.
(c) veenaapponavan@yahoo.com
Thursday, October 09, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே..
அது என்னவோ உங்கள் கவிதைகளில் மட்டும் என்னாலும் நிகழ்வுகளை அனுபவிக்க முடிகிறது..
ஒவ்வொரு கணத்தையும் வாழ்கிறீர்..
ஒரு சிறு நிகழ்வை அழகான கற்பனை ஆக்கி. அதை அழகான கவிதையாயும் மர்ற்றும் ரசவாதம் ரசிக்க வைக்கிறது. பிரமிக்கவும் கூட.
அன்புடன்
சூர்யா.
Post a Comment