Saturday, May 31, 2008

இருவேறு

ஒரு மணி நேரத்துக்கு முன்
ரயில் அடித்து இறந்தவன் உடலை
கருப்பு ப்ளாஸ்டிக் கவரால்
முழுவதும் மூடி
ரயிலில் ஏற்றினார்கள் மூன்று பேர்.
ஒரு கால் செருப்பு எவ்வளவு தேடியும்
கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டான்
பிணத்தின் கால் பக்கம் இருந்தவன்.
இன்னும் கொஞ்ச நேரம் தேடி இருக்கலாம்,
என்ன அவசரம் என்று
கோபித்துக் கொண்டான்
மற்ற இருவரையும்.
புதர் அடியில் கிடக்கும்,
நாளை எடுத்துக் கொள்ளலாம் என்றான் கிழவன்.
ஆனாலும் சமாதானம் ஆகவில்லை
செத்தவனின் செருப்பைத் தேடியவன்.
இறங்கும் போது கவனித்தேன்,
இருவேறு நிறங்களில்
செருப்புகள் அணிந்து இருந்த
அவன் கால்களை.

(c) veenaapponavan@yahoo.com

எட்டு நாலு

அவள் எழுதிய எட்டாவது வாய்ப்பாடு
பேப்பரின் மேல்பக்கம் இடது ஓரம் தொடங்கி
படிப்படியாக கீழ்ப்பக்கம் வலது ஓரம்
நோக்கி வளர்ந்து இருந்தது.
"எட்டு நாலு முப்பத்தாறு"
என்ற வரியை மட்டும்
பேனாவால் சுழித்தேன்.
முப்பத்தாறுதான் என்றாள்.
யோசித்து சொல்லச் சொன்னேன்.
கண்ணை மூடிக்கொண்டு
தீவிரமாக முணுமுணுத்தாள்.
வாய்ப்பாட்டின் தாளம்
மீண்டும் மீண்டும் அவளை
முப்பத்தாறுக்கே கூட்டிச் சென்றது.
என் ஒரு கிரவுண்டு மனையின் பரப்பளவு
எத்தனை சதுர அடிகள்
அதிகமாகி இருக்கும் என்று
கணக்கு போட ஆரம்பித்தேன்.

(c) veenaapponavan@yahoo.com

பூ பறித்தல்

வழியில் அழுது அடம் பிடிக்கும்
குழந்தையை மிரட்ட
இருப்பதிலேயே சின்ன கிளையை
சாலையோர மரத்தில்
தேடுகிறாள் அம்மா.
அழுகையை நிறுத்திய குழந்தை
அதே மரத்தின்
பூ வேண்டும் என்கிறது.

(c) veenaapponavan@yahoo.com

சிக்னல்

தண்டவாளத்தில்
காலி தண்ணீர் பாட்டில்களை
சேகரித்துக் கொண்டிருந்தவள்,
தொலைவில் வரும் ரயிலை
கை காட்டி
நிறுத்தச் சொல்லி விட்டு
நடைமேடையில் ஏறுகிறாள்
சிரித்தபடி.

(c) veenaapponavan@yahoo.com

யார் வேணும்

காலியாக இருந்த
மதுரை மீனாட்சி கோயில் உள்ளே
தயக்கமாக நுழைந்தேன்.
"யார் வேணும்?" என்ற
வயதான பெண் குரல் கேட்டு
விழித்தெழுந்தேன்.

(c) veenaapponavan@yahoo.com