Saturday, November 22, 2008

வீட்டின் வரைபடம்

எழுந்திருக்கும் போது
சில சமயம்
எதிர்பார்க்காத இடங்களில்
சுவர்களும், கதவுகளும்,அறைகளும்
தோன்றி மறைகின்றன.
எந்த இடத்தில் தூங்கினால்
குழப்பம் குறையும் என்று
கண்டுபிடிக்க முடிவு செய்தேன்.
சொந்த ஊரில்
நான் பிறந்து வளர்ந்த
வீட்டின் வரைபடத்தை வைத்து
அதன் மேல்
இப்போது தனியாக தங்கி இருக்கும்
வீட்டின் வரைபடத்தை வைத்து
வெட்டுப் புள்ளிகளை குறித்துக் கொண்டேன்.
இரண்டு வீடுகளிலும்
எந்த அறையில்,
தலையை எந்தப் பக்கம் வைத்து
தூங்க வேண்டும் என்று கண்டுபிடித்தேன்.
சுவர்களில் முட்டிக் கொள்வது
கொஞ்சம் குறைந்தது.
போன வாரம் ஊருக்குப் போனபோது
தூங்குவதற்கு முன்
அறையின் சுவர்களுக்கும் உடலுக்குமான
கோணம் எவ்வளவு என்று கவனிக்கவில்லை.
நடு இரவில், சமையலறையில்
தீர்மானம் இல்லாமல்
சுற்றிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து
அம்மா பயப்பட்டாள்.

(c) veenaapponavan@yahoo.com

ஓரிரு

சனிக்கிழமை காலை உணவு
வாங்கப் போனபோது
நான்கு விரல்களைக் காட்டி
தோசையையும் சுட்டிக் காட்டி
சைகையிலேயே
பார்சல் பண்ண சொல்லி
எடுத்துக் கொண்டு வந்தேன்.
வார இறுதி நாட்களில்
இவனிடம் மட்டும்தானே பேசுவோம்
என்ற சந்தேகம் எழுந்தது.
ஓரிரு நிமிடங்களில் அதை
சரிபார்த்துக் கொண்டு விட்டேன்.

(c) veenaapponavan@yahoo.com

பிரிவைக் குறித்து

கதவு
பிரிவைக் குறிக்கிறது
குழந்தைக்கு.
கதவு அருகே போனாலே
அழ ஆரம்பித்து விடுகிறது.
அதனால் தினமும்
சுவர் வழியாக வெளியேறி
அலுவலகம் போய் வருகிறான்
புது அப்பா.

(c) veenaapponavan@yahoo.com

கடவுளின் கையெழுத்து

கரப்பான்பூச்சிகள் ஓடி மறையும்
பரிமாணத்தில் இருந்து தோன்றினார்
காலெண்டரில் பார்த்த கடவுள்.
இருட்டில் ரயில் நிற்கும் நிலையங்களின்
பெயர்களை எல்லாம் ஓயாமல்
பால்பாயிண்ட் பேனாவால்
என் வலது உள்ளங்கையில்
எழுதிக் காட்டிக் கொண்டிருந்தார்.
நான் இறங்கும் இடம் வந்ததும்
என் பயணச்சீட்டில்
தன் கையெழுத்தைப் போட்டு விட்டு
குண்டூசிகள் விழுந்து மறையும்
திசையில் சென்று மறைந்தார்.
ரயில் நிலையத்தை
விட்டு வெளியேறும்போது
அந்த பயணச்சீட்டை
பரிசோதகர் கேட்டு வாங்கிக் கொண்டார்.

(c) veenaapponavan@yahoo.com

சற்றே

மஞ்சள் விளக்கு
சிகப்பாவதற்கு முன்
பிணம் சாலையைக் கடந்து விட்டது.
பின்னால் வந்தவர்கள்
தயங்கிய நொடியில்
குறுக்கே வண்டிகள்
ஓட ஆரம்பித்து விட்டன.
மீண்டும் பச்சை வரும்வரை
சவ ஊர்வலத்தின் சோகம்
சற்றே குறைந்தது
போல தோன்றியது
பஸ்ஸின் ஜன்னல் வழியாக
வேடிக்கை பார்த்தவனுக்கு.

(c) veenaapponavan@yahoo.com

இடி

சரிதா எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு
வந்து கொண்டிருந்தன
அந்த வட்டாரத்தில்
இடி விழுந்து பழுதான டிவிக்கள்.
கடை முன்னால் கூட்டமாக நின்று
மரணவீடு போல
மெதுவாக விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
மழை மறுபடியும் ஆரம்பித்தது.
கடைக்காரன்
இரவு விடிய விடிய
கடையை மூடாமல்
ஈயத்தை உருக்கி மின் இணைப்புகளை
சரி செய்து கொண்டிருந்தான்.
விடியும் நேரம்
ஒரு இடி இடிக்க ஆரம்பித்தது.
ஒரு துளி ஈயத்தை எடுத்து
அந்த இடியின் கடைவாயில்
லாவகமாக வைத்தான்.
இடி பாதியில் நின்றது.

(c) veenaapponavan@yahoo.com

Saturday, November 08, 2008

மார்கழிக் காட்சி 1

மார்கழிப் பனியின்
மரண ஊர்வலத்தில்
அவசர அவசரமாக வந்து
இணைந்து கொள்கிறாள்
பள்ளிக்குக் கிளம்பிய சிறுமி.

(c) veenaapponavan@yahoo.com

இப்படி அப்படி

"இப்படி இப்படி டான்ஸ் ஆடுகிறேன்"
என்றாள் தொலைபேசியில் சிறுமி.
இப்படி இப்படி என
ஒரு காட்சி தோன்றியது.
அப்படி அப்படித்தானா என்று
பார்த்து விடுகிறேன்
ஊருக்குப் போகும்போது.

(c) veenaapponavan@yahoo.com

உள்ளே வெளியே

குளிர்பதன வோல்வோ பஸ்ஸில் இருந்து
வெளியேற முடியாமல்
கண்ணாடிகளில் முட்டி முட்டி
தடுமாறிக் கொண்டிருக்கிறது
பட்டாம்பூச்சி.
சிக்னலில் பஸ் நின்றபோது
திறக்க முடியாத ஜன்னலில்
செய்தித்தாள் வாங்கச சொல்லி
கண்ணாடியை தட்டுகிறான்
சிறுவன்.

(c) veenaapponavan@yahoo.com