Wednesday, April 22, 2009

அம்மாச்சி

படுத்த படுக்கையான அம்மாச்சி
ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.
தன் கல்யாணம் எப்படி நடந்தது என்பதைத்
திரும்பத் திரும்ப
மூன்று நாட்களுக்கு சொன்னவள்
நான்காம் நாள்
தன் பேத்தியை அழைத்து
பக்கத்தில் உட்கார வைத்து
பின் கழுத்தில் குங்குமம்
வைத்துக் கொள்வதைப் பற்றி
எடுத்து உரைத்தாள்.
கவிதை எழுதும் பழக்கமுள்ள பேத்தி
இப்போதும் சிலசமயம்
சிமிழில் இருந்து
விரலால் தொட்டு
குங்குமத்தை எடுத்து
மெதுவாக
கையை பின்னால் கொண்டு போகிறாள்.
பின்னால் போனதும்
அது அவள்
அம்மாச்சியின் கையாகி விடுகிறது.

(c) veenaapponavan@yahoo.com

6 comments:

சேரல் said...

ரசிக்கும்படியான கவிதை. நன்றி

-ப்ரியமுடன்
சேரல்

த.அகிலன் said...

பின்பக்கமாகக் குங்குமம் இட்டுக்கொள்வது என்பது எதனைக்குறிக்கிறது.. (தெரியாது அதனால் கேட்டேன்)

Saravana Kumar MSK said...

கவிதை உங்கள் வழமை போலவே..

//த.அகிலன் said...
பின்பக்கமாகக் குங்குமம் இட்டுக்கொள்வது என்பது எதனைக்குறிக்கிறது.. (தெரியாது அதனால் கேட்டேன்)//
அதே.. அதே.. எதனைக்குறிக்கிறது??

Karthika said...

எனக்கு என்னோட அம்மாச்சி ஞாபகம் வருது இதைப் படிக்கும்போது. :)

veenaapponavan said...

நன்றி, சேரல், அகிலன், சரவணகுமார், கார்த்திகா.

@கார்த்திகா - அம்மாக்கள் வேறு வேறு மாதிரி இருந்தாலும் பாட்டிகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.

இராவணன் said...

அழகான கவிதை.